இத்தாலி கேபிள் கார் விபத்து: பலி 14 ஆக உயர்வு; பயணியின் திகில் பேட்டி

இத்தாலியின் வடக்கே மலை பகுதிக்கு செல்லும் கேபிள் கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2021-05-24 00:23 GMT
ரோம்,

இத்தாலி நாட்டின் வடக்கே பீடுமோன்ட் நகரில் ஸ்ட்ரெஸ்சா என்ற கிராமத்தில் மேகியோர் என்ற ஏரி ஒன்று அமைந்துள்ளது.  இதன் கரை பகுதியில் இருந்து மோட்டரோன் என்ற மலை குன்று பகுதிக்கு செல்ல கேபிள் கார் வசதி உள்ளது.

கொரோனா ஊரடங்கால் இந்த பகுதி வழியேயான கேபிள் கார் பயண சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.  இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன் ஊரடங்கு தளர்வுகளால் இந்த கேபிள் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மலை பகுதிக்கு 10 பேருடன் சென்ற கேபிள் கார் 985 அடி உயரத்தில் இருந்தபொழுது திடீரென விபத்தில் சிக்கியுள்ளது.  இதில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.  2 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு துரின் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதன்பின்னர் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்தது.  மீட்பு பணிகளும் ஏறக்குறைய முடிந்து விட்டன.  இந்நிலையில், இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்து உள்ளது.

சிகிச்சை பெற்றவர்களில் ஒரு குழந்தை உயிரிழந்து உள்ளது.  இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மற்றொரு குழந்தைக்கு அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இதுபற்றி இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்த சம்பவம் பற்றி லூயிசா டெஸ்சரின் (வயது 27) என்ற மாணவி கூறும்பொழுது, நானும், எனது தோழிகளும் சம்பவம் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு இந்த கேபிள் காரில் பயணித்தோம்.

நாங்கள் கேபிள் காரில் ஏறியபொழுது, எந்தவித வித்தியாசமான சிக்னல்களும் எங்களுக்கு தெரியவில்லை.  விபத்து பற்றி அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம் என தெரிவித்து உள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இத்தாலி நாட்டு பிரதமர் மேரியோ டிராகி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மிச்செல் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.



மேலும் செய்திகள்