அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்ட ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

Update: 2021-05-28 00:29 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவின் சான்ஜோஸ் நகரத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கி வன்முறைக்கு முடிவு கட்டுமாறு நாடாளுமன்றத்தை ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டுமே அங்கு 230 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் நேற்று முன்தினம் அங்கு நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டது, அந்த நாட்டை அதிர வைத்துள்ளது. இதையொட்டி பதைபதைக்க வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சான்ஜோஸ் நகர ரெயில் நிலைய பணிமனையின் சாண்டா கிளாரா வேலி போக்குவரத்து மையத்தில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை 6.45 மணிக்கு ஊழியர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

அப்போது துப்பாக்கி ஏந்திய நபர் கூட்டத்தினரை நோக்கி திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. சுடப்பட்டவர்கள் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். மற்றவர்கள் நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் படையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். சிலர் படுகாயங்களுடன் விழுந்து கிடந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் கண்டறியப்பட்டது.

துப்பாக்கிச்சூட்டில் பலியான 8 பேரும் போக்குவரத்து ஊழியர்கள் ஆவார்கள்.

முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் சாமுவேல் கேசிடி (வயது 57), ரெயில்வே ஊழியர் என தெரிய வந்துள்ளது.

அந்த சம்பவம் குறித்து சாமுவேல் கேசிடியின் முன்னாள் மனைவி சிசிலியா நெல்ம்ஸ் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “ அவர் தனது சக ஊழியர்களை கொல்ல விரும்புவதாகக்கூறுவார். ஆனால் அவர் அதைச் செய்வார் என்று நான் நம்பவில்லை” என குறிப்பிட்டார்.

கேசிடியின் அண்டை வீட்டுக்காரரான டக் சுஹ் என்பவர், “துப்பாக்கிச்சூடு நடத்திய கேசிடி தனிமையில் இருந்தார், அவர் விசித்திரமானவர்” என தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு முன்னதாக கேசிடி வசித்து வந்த வீட்டில் தீப்பற்றி எரிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. எனவே துப்பாக்கிச்சூடு நடத்துபவதற்கு முன்பாக அவரே தன் வீட்டுக்கு தீ வைத்து விட்டு வந்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சான்ஜோஸ் நகரில் நடந்த பயங்கர துயர சம்பவம் பற்றி என்னிடமும், துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கும் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய நபர், 8 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். பலரை படுகாயப்படுத்தி உள்ளார்.

இதில் நாடாளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவில் பெருந்தொற்றாக உள்ள துப்பாக்கி வன்முறையை முடிவுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்பதுதான் துப்பாக்கி வைத்துள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவின் மத்திய அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்