விபசார வீடு பாகிஸ்தான்: ஆப்கானிஸ்தான் உயரதிகாரி பேச்சால் தொடரும் சர்ச்சை

பாகிஸ்தானை விபசார வீடு என குறிப்பிட்டு பேசிய ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடனான உறவை பாகிஸ்தான் துண்டித்துள்ளது.

Update: 2021-05-31 04:05 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கு எதிரான தலீபான் பயங்கரவாதிகளின் போரில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.  அமைதியை நிலைநாட்ட நடத்தப்பட்ட அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு காணப்படவில்லை.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப், நங்கர்ஹார் மாகாணத்தில் பொது கூட்டத்தில் பேசும்பொழுது, பாகிஸ்தானை ஒரு விபசார வீடு என குறிப்பிட்டார்.

இது பாகிஸ்தான் அரசுக்கு ஆத்திரமூட்டியது.  இதுபற்றி அந்நாட்டின் பெயர் வெளியிட விருப்பமில்லாத மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் சமீபத்திய பேச்சால் அவருடன் இனி பாகிஸ்தான் அரசு இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடாது.

ஆப்கானிஸ்தான் அரசிடம், எங்களது கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்துள்ளோம் என கூறினார்.  இதுபோன்ற பேச்சுகள் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிந்து கொள்ளல் ஆகியவற்றை குழிதோண்டி புதைத்துள்ளது என்றும் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்தது. 

எனினும், தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் அதன் உளவு அமைப்பு மீது மொஹிப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.  தலீபான்களுக்கு ஆதரவு வழங்கி, அவர்களை வழிநடத்தி செல்கின்றனர் என்றும் தெரிவித்து உள்ளார்.

இதனை பாகிஸ்தான் தலைவர்கள் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என மறுத்துள்ளனர்.

பாகிஸ்தானில் பாஷ்டூன்கள் மற்றும் பலூச் இன மக்கள் உள்ளிட்ட பழங்குடிகளாக உள்ளவர்கள் கூட அந்நாட்டு அரசாட்சியில் மகிழ்ச்சியாக இல்லை.  தங்களது உரிமைகளை பெற அவர்கள் போராடி வருகின்றனர் என்றும் மொஹிப் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்