“கொரோனாவை தடுக்க தவறிவிட்டார்” - பிரேசிலில் அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டதாக கூறி, பிரேசில் அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2021-06-04 06:20 GMT
பிரேசிலியா,

கொரோனா தொற்று பரவலின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்றாகும். மொத்தம் 21 கோடி மக்கள் தொகை கொண்ட பிரேசில் நாட்டில், இதுவரை கொரோனா பாதிப்பால் 4.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றயை தினம் மட்டும், அங்கு 95,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

கொரோனா தொற்று முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வந்த சமயத்தில், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, ஊரடங்கை கடுமையாக்காமல், முக கவசம் அணியத் தேவையில்லை எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர் மெத்தனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

பிரேசில் நாடாளுமன்ற விசாரணைக் குழுவினர் நடத்திய விசாரணையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிரேசில் அரசு தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதனால் அதிபர் போல்சனாரோவிற்கு எதிராக கடந்த மே 30-ந் தேதி ஆயிரக்காண மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த புதன்கிழமையன்று நாட்டு மக்களுக்கு அதிபர் போல்சனாரோ உரையாற்றிய போது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரியோடி ஜெனிரோ மக்கள் பாத்திரங்களை தட்டி ஓசையெழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பல நாட்களாக அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், அதிபர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை பிரேசிலில் வலுத்து வருகிறது. 

மேலும் செய்திகள்