பாகிஸ்தான் ராணுவ தளங்களை அமெரிக்க வீரர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது: இம்ரான்கான்

தலீபான் பயங்கரவாதிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

Update: 2021-06-22 14:02 GMT

வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் படைகள் முழுமையாக வெளியேறிய பின்னர் அமெரிக்க வீரர்களை பாகிஸ்தானில் உள்ள ராணுவ தளங்களில் நிறுத்தி எல்லை தாண்டி ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் முடிவு செய்திருப்பதாக அந்த நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்த நிலையில் அமெரிக்க வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதிபட தெரிவித்துள்ளார்.‌

இது குறித்து அவர் கூறுகையில், “ராணுவ தளங்களை வழங்குவது என்பது எளிதான ஒன்று அல்ல. நாங்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து உள்ளோம். ஆப்கானிஸ்தானில் குண்டு வீசவும், அங்கு உள்நாட்டு போரை தொடங்கவும் பாகிஸ்தானின் ராணுவ தளங்களை அமெரிக்க வீரர்கள் பயன்படுத்த ஒப்புக்கொண்டால், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளால் பழிவாங்க இலக்கு வைக்கப்படும். கடந்த காலத்தில் பாகிஸ்தான் இதே தவறை செய்தது. ஆனால் அந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டது” என கூறினார்.

மேலும் செய்திகள்