சோமாலியாவில் 21 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Update: 2021-06-28 18:12 GMT
இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களையும் அப்பாவி பொதுமக்களையும் குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆப்பிரிக்க நாட்டு கூட்டுப் படைகளின் உதவியோடு சோமாலியா ராணுவம் இவர்களின் கொட்டத்தை ஒடுக்க போராடி வருகிறது.இந்த சூழலில் சோமாலியாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக பன்ட்லேண்ட் மாகாணத்தில் குண்டுவெடிப்பு துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதலில் ஈடுபட்ட அல் ஷபாப் பயங்கரவாதிகள் 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மாகாண ராணுவ கோர்ட்டு 21 பேருக்கும் மரண தண்டனை விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் பயங்கரவாதிகள் 21 பேருக்கும் நேற்றுமுன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாதிகள் 21 பேரும் ஒரே வரிசையில் நிற்க வைக்கப்பட்டு துப்பாக்கி சுடும் வீரர்களால் சுடப்பட்டு அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பன்ட்லேண்ட் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 21 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்