ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: தூதரகம் அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்களின் வன்முறை செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-06-29 19:59 GMT
Photo Credit: AFP
காபூல்,

ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் இந்திய குடிமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  

ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களிலும் பாதுகாப்பு நிலைமை மிகவும்  மோசமாக உள்ளது. ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத குழுக்கள் வன்முறை செயல்களை அதிகரிக்கலாம். நாட்டின் பல்வேறு இடங்களிலும் தாக்குதலை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பொதுமக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. 

இந்திய நாட்டு மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. கூடுதல் அச்சுறுத்தலாக இந்தியர்கள் கடத்தப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, முக்கிய நகரங்களுக்கு வெளியே பயணிப்பதை கூடுமானவரை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.  அத்தியாவசிய தேவைகளுடன் ஏதேனும் பயணம் மேற்கொண்டால் கும்பலாக பயணிப்பதை முடிந்த வரை தவிர்த்து விட வேண்டும். 

ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும் அனைத்து இந்தியர்களும்  இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் இந்தியர்களும் பதிவு செய்யாவிட்டால் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் செய்திகள்