உலக அளவில், அக்டோபருக்குப்பின் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை சரிவு - உலக சுகாதார அமைப்பு தகவல்

உலக அளவில், அக்டோபருக்குப்பின் வாராந்திர கொரோனா பலி எண்ணிக்கை சரிந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-07 19:03 GMT
ஜெனீவா, 

உலக அளவில் வாராந்திர கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் சாவு எண்ணிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 28-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையிலான ஒரு வாரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்பு மற்றும் சாவு எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இதில் உலக அளவில் 26 லட்சம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் சற்று அதிகம் ஆகும்.

அதேநேரம் பலி எண்ணிக்கையோ 54 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்திருக்கிறது. இது 7 சதவீதம் வீழ்ச்சியாகும். வாராந்திர பலி எண்ணிக்கை இவ்வளவு சரிந்திருப்பது கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் முதல் முறை என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மேற்படி வாரத்தில் ஐரோப்பிய மண்டலத்தில் புதிய பாதிப்புகள் 30 சதவீதம் அதிகரித்து இருந்த நிலையில், ஆப்பிரிக்காவில் சாவு எண்ணிக்கை 23 சதவீதம் உயர்ந்து இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்தியா மற்றும் பிரேசிலில் புதிய பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும், வாராந்திர எண்ணிக்கையில் இரு நாடுகளிலும் பாதிப்பு குறைந்திருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்