அமெரிக்கா: பெண்ணை கடித்து கொன்ற கரடியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர்

அமெரிக்காவில் குடிலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கரடி ஒன்று கடித்து கொன்ற துயர சம்பவம் நிகழ்ந்தது.

Update: 2021-07-10 22:12 GMT
கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நர்ஸ் லே டேவிஸ் லோகன். 65 வயதான இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் இருந்து மொன்டானா மாகாணத்துக்கு சைக்கிளில் பயணம் செய்தார். இவர்கள் 3 பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மொன்டானா மாகாணத்தின் ஓவாண்டே நகரை சென்றடைந்ததும், அங்கேயே ஓய்வு எடுக்க முடிவு செய்தனர். பின்னர் 3 பேரும் இரவு உணவை முடித்து விட்டு தனித்தனியாக குடில்கள் அமைத்து உள்ளே தூங்கினர்.

அப்போது நள்ளிரவில் அங்கு பெரிய கரடி ஒன்று வந்தது. அந்த கரடி குடிலில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த லே லோகனை தரதரவென இழுத்து சென்று, கடித்து குதறியது. லே லோகனின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது சகோதரி மற்றும் தோழி கையில் கிடைத்த பொருட்களை வீசி எறிந்து கரடியை விரட்டியடித்தனர். பின்னர் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த லோகனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வனத்துறை அதிகாரிகள் அந்த கரடியை தேடிக் கண்டுபிடித்து கொல்ல முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதி முழுவதும் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தநிலையில், தற்போது கரடியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்