கென்யாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 13 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சியா நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டது.‌

Update: 2021-07-19 03:08 GMT
நைரோபி, 

இந்த பெட்ரோல் டேங்கர் லாரி, மாலங்கா என்கிற நகருக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய லாரி எதிர்திசையில் பால் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன.

இதை பார்த்ததும் உள்ளூரைச் சேர்ந்த மக்கள் பெட்ரோலை சேகரிப்பதற்காக ஓடிச் சென்றனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பெட்ரோலை சேகரித்துக் கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 31 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் செய்திகள்