ஆப்கானிஸ்தானில் 89 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு; ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றம் காரணமாக தலீபான் பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஒதுக்கியுள்ளது.

Update: 2021-07-26 21:17 GMT
கடந்த 2 மாதங்களாக அவர்கள் அரசு படைகளை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். மேலும் நாட்டின் முக்கியமான நகரங்கள் அனைத்தையும் அவர்கள் வேகமாக கைப்பற்றி வருகின்றனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 89 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குனார், காந்தஹார், ஹெரட் மற்றும் ஹெல்மண்ட் ஆகிய மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 89 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 82 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த 13 கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்