ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராடிய ஜனநாயக ஆர்வலருக்கு 9 ஆண்டு சிறை

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்து வரும் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தியது. இந்த சட்டம் ஹாங்காங்கின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Update: 2021-07-31 02:28 GMT
இந்த சூழலில் ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டாங் யிங் கிட் (வயது 24) என்கிற ஜனநாயக ஆர்வலர் மீது முதன்முதலாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. பேரணியின் போது அவர் போலீசார் மீது மோட்டார் சைக்கிளை மோதியதாகவும், தடை செய்யப்பட்ட வாசகங்கள் அடங்கிய கொடியை வைத்திருந்ததாகவும் அவர் மீது பயங்கரவாத மற்றும் பிரிவினை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.இவர் மீதான வழக்கு விசாரணை ஹாங்காங் கோர்ட்டில் நடந்து வந்தது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட முதல் வழக்கு என்பதால் இந்த வழக்கு அனைவர் மத்தியிலும் மிகுந்த கவனம் பெற்றிருந்தது. அண்மையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் டாங் யிங் கிட்டை குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இந்த வழக்கில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. டாங் யிங் கிட் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வக்கீல் கோரியநிலையில், நீதிபதி அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்