ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதாக தகவல்

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

Update: 2021-08-15 05:19 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில், அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுவந்த அமெரிக்க ராணுவம் அங்கிருந்து சமீபத்தில் வெளியேறிவருகிறது. 

வரும்  30-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறிவிடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து நிலைமை அங்கு மிக மோசமாக மாறிவருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால், பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜலலாபாத் நகரத்தையும் இன்று காலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் தலைநகர் காபூலை தவிர ஏனைய பெரும்பாலான நகரங்கள் தலிபான்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணங்களில் ஒன்று நகர்கார். இந்த மாகாணத்தின் தலைநகர்தான் ஜலாலாபாத். இது பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நகரங்களில் ஒன்று. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தையும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையும் இணைக்கும் சாலை ஜலாலாபாத் வழியேதான் அமைக்கப்பட்டுள்ளது. காபூலுக்கு கிழக்கே இந்த ஜலாலாபாத் அமைந்துள்ளது. தற்போது இந்த நகரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளது.

மேலும் செய்திகள்