ஆப்கானிஸ்தானில் உள்ள 2 இந்திய தூதரகங்களை தலீபான்கள் சூறையாடியதாக தகவல்

காந்தகார் மற்றும் ஹிராத் நகரங்களில் உள்ள இந்திய தூதரங்களை தலீபான்கள் சூறையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2021-08-20 12:27 GMT
புதுடெல்லி,

இன்று அகில உலகமும் கவலையோடு நோக்கும் தேசமாக ஆப்கானிஸ்தான் மாறிவிட்டது. அதிக ரத்தம் சிந்தாமல் அந்த நாட்டை தலீபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட நிலையில், ஒவ்வொரு நாடும் தத்தமது ராஜதந்திர அதிகாரிகள், குடிமக்களை பாதுகாப்பாக தாயகம் கொண்டு வருவது குறித்து சிந்திக்கத் தொடங்கின. 

அதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன.  அந்த வகையில், காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு இந்தியா திரும்பினர். காபூலில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதுபோலவே ஆப்கனில் உள்ள காந்தகார், ஹிராத் உள்ளிட்ட நகரங்களில் அமைந்திருந்த துணை தூதரகங்கள் கடந்த மாதமே மூடப்பட்டன. இந்தநிலையில் காந்தகார் மற்றும் ஹிராத் நகரங்களில் உள்ள இந்திய தூதரங்கள் மூடப்பட்ட நிலையில் தூதரக கட்டிடத்தை தலீபான்கள் சூறையாடியதாக அரசு வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

பின்னர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும்  வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை எடுத்துச்சென்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

காபூலில் உள்ள இந்திய தூதரகத்தை மூட வேண்டாம் எனவும், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என  தலீபான்கள் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்