போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தலீபான்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-04 21:01 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய ஓரிரு வாரங்களிலேயே தலீபான் பயங்கரவாதிகள் முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் வசம் ஆக்கினார். கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் காபூலை அவர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதைத்தொடர்ந்து 20 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்த தலீபான்கள் தங்களது தலைமையில் நாட்டில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர். 

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் அரசியலில் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் தலீபான்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி,

“ தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கும் அரசியல் உரிமை வேண்டும் என பெண் உரிமை ஆர்வலர்கள்  காபூலில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தலீபான்கள்  அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பரை தலீபான்கள் தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க  கண்ணீர் புகை குண்டுகளையும் அவர்கள் வீசினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்