மெக்சிகோ: மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளம் - நோயாளிகள் 16 பேர் பலி

மெக்சிகோவில் மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளத்தால் ஏற்பட்ட மின் தடை மற்றும் ஆக்சிஜன் தடையால் நோயாளிகள் 16 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-09-07 22:43 GMT
மொக்சிகோ சிட்டி,

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் தலைநகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் டவுண்டவுன் டூலா நகரில் நேற்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

டவுண்டவுன் டூலா நகரில் உள்ள பொதுமருத்துவமனைக்குள் அதிகாலை திடீரென வெள்ளநீர் புகுந்தது. வெள்ளம் புகுந்த சமயத்தில் மருத்துவமனையில் 56 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். நோயாளிகளில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் மின்சார இணைப்பு தடைபட்டது. மேலும், நோயாளிகளுக்கான ஆக்சிஜன் இணைப்பும் தடைபட்டது. இதனால், கொரோனா சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் உள்பட 16 நோயாளிகள் முச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மருத்துவமனைக்குள் சிக்கிய எஞ்சிய நோயாளிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மின் இணைப்பு, ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 16 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகள்