உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றினார்

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றினார்.

Update: 2021-09-12 20:29 GMT
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந் தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் சுமார் 3000 பேர் வரை கொன்று குவிக்கப்பட்டனர்.‌இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றது. அதனை தொடர்ந்து அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக அய்மன் அல்-ஜவாஹிரி பொறுப்பேற்றார்.இந்த சூழலில் உடல்நல குறைவு காரணமாக அய்மன் அல்-ஜவாஹிரி உயிரிழந்ததாக கடந்த ஆண்டு இறுதியில் செய்திகள் வெளியாகின. ஆனால் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இதனை உறுதி செய்யவில்லை. அதே வேளையில் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 20-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் உடல்நல குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி தோன்றினார். அமெரிக்காவின் தனியார் உளவு அமைப்பான எஸ்.ஐ.டி.இ. இந்த வீடியோவை ஆராய்ந்து, அது நேற்று முன்தினம் வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது. 61 நிமிடம் 37 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பேசும் அய்மன் அல்-ஜவாஹிரி, “ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது” என கூறுகிறார்.அதோடு கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் உள்ள ரக்கா நகரில் ரஷிய படைகளை குறிவைத்து அல்-கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாராட்டினார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் 20 வருட போருக்கு பின் வெளியேறியதையும் அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் கடந்த மாதம் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்