இத்தாலியில் நடைபெறும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் பங்கேற்பு

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றுள்ளார்.

Update: 2021-09-28 16:38 GMT
ரோம்,

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான கிரேட்டா தன்பெர்க்(வயது 17), பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

பொது மேடைகளிலும், மாநாடுகளிலும் தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசுபவராக கிரேட்டா தன்பெர்க் அறியப்படுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் இந்த வாரம் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இருப்பினும் இது போன்ற மாநாடுகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரின் கோரிக்கைகள் கேட்கப்படுவதாக உலக தலைவர்கள் காட்டிக் கொள்கின்றனர் என்று கிரெட்டா தன்பெர்க் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்