நாசா வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்கள்

நாசா வெளியிட்ட செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களின் மூலம் அங்கு நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Update: 2021-10-08 13:08 GMT
வாஷிங்டன்,

செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. 

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட இந்த விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதற்கு முன் நாசா அனுப்பிய ஆர்பிட்டர்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையில், இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதியதால், இந்த ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ பகுதியை ஆய்வுக்காக நாசா தேர்ந்தெடுத்தது.

இந்த நிலையில் தற்போது ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் ரோவர் கருவி மூலம் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேல்பரப்பில் அமைந்துள்ள மலைகள், பாறைகள், படிமங்கள் ஆகியவற்றை இதுவரை இல்லாத அளவு துல்லியமான தரத்தில் இந்த புகைப்படங்களில் காணமுடிகிறது. 

‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் செயல்பாடுகளை புளோரிடாவில் உள்ள நாசா வானியலாளர் எமி வில்லியம்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. தற்போது கிடைத்துள்ள செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் குறித்து எமி வில்லியம்ஸ் கூறுகையில், ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளின் அம்சங்களுக்கும், நமது பூமியின் நதி டெல்டாக்களில் உள்ள வடிவங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

புகைப்படத்தில் காணப்படும் மூன்று அடுக்குகளின் வடிவமானது, சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்ததற்கான ஆதாரமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், இந்த படங்கள் ஒரு புத்தகத்தைப் படிப்பது போன்றது என்றும் ரோவர் கருவியை எங்கு அனுப்ப வேண்டும் என  ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிப்பதற்கு இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்