ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு இல்லை: தலீபான்கள்

பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது என செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறினார்.

Update: 2021-10-09 22:05 GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக ஆக்கிரமித்தனர். அதன் பின்னர் ஏற்கனவே தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி ஆகஸ்டு 30-ந் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறின.

இந்த நிலையில் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது.

இந்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாக தலீபான் அரசியல் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்களை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் தலீபான் ஒத்துழைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், ‘‘எந்தவொரு பயங்கரவாத அச்சுறுத்தலையும் எங்களால் தனியாக சமாளிக்க முடியும். எனவே பயங்கரவாத ஒழிப்பில் அமெரிக்காவுடன் எந்த ஒத்துழைப்பும் இருக்காது’’ என கூறினார்.

மேலும் செய்திகள்