வியாழன் கிரகத்திற்கு செல்லும் விண்கலம் இன்று பயணத்தை தொடங்கியது

வியாழன் சிறுகோள்களை ஆராய்ச்சி செய்யும் லூசி என்ற விண்கலத்தை நாசா இன்று விண்ணில் ஏவியது.

Update: 2021-10-16 10:40 GMT
வாஷிங்டன்,

இன்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வியாழனின் சிறுகோள்களை ஆய்வு செய்யும் வகையில் 12 ஆண்டு பயணத்திட்டம் கொண்ட லூசி என்ற விண்கலத்தை ஏவியுள்ளது. சூரிய மண்டலத்தின் உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில் அட்லஸ் வி ராக்கெட் மூலம் இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளது. 

சூரியனிலிருந்து வெகு தொலைவிற்கு பயணிக்கும் சூரிய சக்தியால் இயங்கும் முதல் விண்கலம் லூசி ஆகும். லூசி 2025-ல் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்திற்கு இடையில், மெயின் பெல்ட்டில் உள்ள டொனால்ட் ஜோஹன்சன் என்ற சிறுகோளை முதலில் அடையும்.

2027 முதல் 2033-க்குள் லூசி வியாழனை வழி நடத்தும் ஐந்து சிறுகோள்கள் உட்பட ஏழு ட்ரோஜன் சிறுகோள்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும். அதில் 95 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பெரிய சிறுகோளும் உள்ளது.

லூசி அவற்றின் மேற்பரப்பில் இருந்து அவற்றின் புவியியல், நிறை, அடர்த்தி மற்றும் அளவு உள்ளிட்டவற்றை ஆராயும். ட்ரோஜன் சிறுகோள்கள் பூமி உள்ளிட்ட அனைத்து சூரியனின் கிரகங்கள் உருவான விதம் பற்றிய முக்கிய தடயங்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

லூசியில் ஒரு வைரக்கற்றை ஸ்ப்ளிட்டர் (லூசி தெர்மல் எமிஷன் ஸ்பெக்ட்ரோமீட்டர்) உள்ளது. இது தொலை தூரத்திலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களை கண்டறிந்து அதன் மூலம் சிறுகோள்களின் மேற்பரப்பு வெப்பநிலையை வரைபடமாக்கும்.

மேலும் செய்திகள்