ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் சாவு

ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினியால் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-10-24 22:01 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சமூகத்தினராக ஹசாராக்கள் என்று அழைக்கப்படும் ஹசாரா இன மக்கள் உள்ளனர். கடந்த கால தலீபான் ஆட்சியின் போது (1996-2001) இந்த ஹசாரா இன மக்கள் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தற்போது ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்கள் வசமாக்கியுள்ள தலீபான்கள் கடந்த முறையை போல அல்லாமல் ஹசாரா இன மக்களை தங்களது அரசு பாதுகாக்கும் என உறுதியளித்துள்ளனர்.

ஆனால் அதற்கு நேர்மாறாக ஹசாரா இனமக்கள் மீது தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் ஹசாரா இனத்தை சேர்ந்த 12 வயது சிறுமி உள்பட 13 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் ஹசாரா இன மக்கள் அதிகம் வாழும் மேற்கு காபூலில் சிறுவர்கள் 8 பேர் பசி, பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹாஜி முகமது மொஹகேக் என்பவர் பேஸ்புக்கில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அவர் தனது பதிவில் “மேற்கு காபூலில் வசித்து வரும் ஹசாரா இனமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முறையாக கிடைக்கவில்லை. இதனால் பசி, பட்டினியால் சிறுவர்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்