அமெரிக்காவில் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 11 வயது சிறுமி

விபத்து ஏற்பட்ட போது, கடைசியாக தனது தந்தை தன்னை அணைத்துக் கொண்டு காயமடையாமல் காப்பாற்றினார் என்று சிறுமி லேனி பெர்டியூ கூறியுள்ளார்.

Update: 2021-11-17 00:05 GMT
நியூயார்க்,

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பீவர் தீவை சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர். அவர்களுடன் மைக் பெர்டியூ என்பவரும், அவரது 11 வயது மகள் லேனி பெர்டியூவும் விமானத்தில் பயணித்தனர்.

இந்த விமானம் பீவர் தீவில் உள்ள வோல்கே விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாராத வகையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் அந்த தம்பதி, அவர்களுடன் பயணம் செய்த மைக் பெர்டியூ மற்றும் விமானி என 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமக உயிரிழந்தனர். அந்த தம்பதியின் செல்லப்பிராணிகளான 2 நாய்களும் இந்த விபத்தில் இறந்தன.

அதே வேளையில் மைக் பெர்டியூவின் 11 வயது மகள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினாள். அவள் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். விமான விபத்துக்கான காரணம் என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சிகிச்சை பெற்று வரும் லேனி பெட்ரியூ தற்போது நலமாக இருப்பதாகவும், இருப்பினும் பூரண குணமடைய இன்னும் சில காலம் தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட போது, கடைசியாக தனது தந்தை தன்னை அணைத்துக் கொண்டு காயமடையாமல் காப்பாற்றினார் என்று லேனி பெர்டியூ தெரிவித்ததாக அவளது தாய் கிறிஸ்டினா பெர்டியூ கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்