பல்கேரியா: சுற்றுலா பஸ் தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு

பல்கேரியாவில் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்த கோரவிபத்தில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-11-23 21:53 GMT
சோபியா, 

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு மசிடோனியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் துருக்கியில் சுற்றுலாவை முடித்து கொண்டு நேற்று முன்தினம் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டனர். அவர்களது பஸ், பல்கேரியா வழியாக வடக்கு மசிடோனியாவுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த நிலையில் பல்கேரியா நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியவில் அந்த நாட்டின் தென்மேற்கில் போஸ்னெக் என்கிற கிராமத்துக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாரத வகையில் பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார்.

ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. மாறாக சாலையோரம் உள்ள தடுப்பு வேலியின் மீது பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் உடனடியாக தீப்பிடித்தது. இதனால் பஸ்சில் இருந்த அனைவரும் மரண ஓலமிட்டனர். கண்இமைக்கும் நேரத்தில் பஸ் முழுவதிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்ததால் உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தீயில் சிக்கிக்கொண்டனர். சில நொடிகளில் பஸ் முழுவதுமாக எரிந்து, உருக்குலைந்து போனது.

இதனிடையே இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த கோர விபத்தில் 12 சிறுவர்கள் உள்பட 46 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் பல்கேரியா போலீசார் இதுபற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்