7 மாதங்களுக்குப் பின் நைஜீரியாவில் டுவிட்டர் மீதான தடை நீக்கம்

7 மாதங்களுக்குப் பின் நைஜீரியாவில் டுவிட்டர் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-14 22:15 GMT
அபுஜா,

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகம்மது புகாரி. இவர் பிராந்திய ரீதியிலான பிரிவினைவாதிகளைத் தண்டிப்பது தொடர்பாக டுவிட்டர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து டுவிட்டரை நைஜீரியா அரசு கடந்த ஜூன் மாதம் முடக்கி நடவடிக்கை எடுத்தது.

டுவிட்டர் நிறுவனம், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாக நைஜீரிய அரசு அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ளூர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு டுவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து டுவிட்டரை முடக்கி பிறப்பித்த உத்தரவை, 7 மாதங்களான நிலையில் திரும்பப்பெறுவதாக நைஜீரிய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் டுவிட்டரைப் பார்க்க அனுமதி கிடைத்துள்ளது.

டுவிட்டர் ஆர்வலர்கள் சிலர் வி.பி.என். என அழைக்கப்படுகிற வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி டுவிட்டர் முடக்கத்துக்குப் பின்னரும் அதைப்பார்த்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

டுவிட்டர், அந்த நாட்டில் பிரபலமாக உள்ளது. மேலும், இந்த தளம் அணி திரட்டும் கருவியாகவும் அங்கு பயன்படுத்தப்படுகிறது. என்ட்சார்ஸ் என்ற ஹேஷ்டேக்கின் கீழ் போலீஸ்துறையின் மிருகத்தனத்துக்கு எதிரான போராட்டங்களின்போது ஆதரவைத்திரட்ட டுவிட்டரை ஆர்வலர்கள் பயன்படுத்தினர். இது உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

மேலும் செய்திகள்