நைஜீரியா: வேகமாக சென்ற போது பஸ் டயர் கழன்று விபத்து - 8 பேர் பலி

நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற பஸ் டயர் கழன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2022-01-15 03:10 GMT
அபுஜா,

நைஜீரியாவின் கிழக்கு மாநிலமான தாராபாவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் கழன்றதில் பேருந்து பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எட்டு பேர் பலியாகி உள்ளனர். மேலும் பேருந்தில் சென்ற அனைவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தாராபாவில் உள்ள போலீஸ் செய்தித் தொடர்பாளர் உஸ்மான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

'தாராபாவில் உள்ள ஐவேர் - உகாரி நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தாராபாவின் தலைநகரான ஜலிங்கோவில் இருந்து சென்று கொண்டிருந்த பேருந்து, எனுகு என்னும் பகுதிக்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தின் டயர் கழன்றதில் பேருந்து பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். 

பேருந்தில் சென்ற அனைவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்' என்று கூறினார்.

மேலும் அவர் விபத்து ஏற்பட்டதற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என்று கூறியுள்ளார். வாகன ஓட்டிகள் வேக வரம்பை மீறவேண்டாம் என்றும், வாகனங்களை அடிக்கடி நல்ல நிலையில் இருக்கின்றதா என்பதை உறுதிசெய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்