ஏமனில் சிறைச்சாலை மீது வான்தாக்குதல்; பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

ஏமனில் சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-01-23 00:55 GMT
கோப்புப்படம்
ஏடன், 

ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த போரில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

சவுதி கூட்டுப்படைகள் தரை வழியாகவும், வான் வழியாகவும் நடத்தும் தாக்குதல்களில் இதுவரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக சவுதி கூட்டுப்படைகள் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தபோதும், அந்த படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசியும், டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் டிரோனை கொண்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சவுதி கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஏமன் நாட்டின் மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தபட்டது.

சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டதில் அந்த கட்டிடம் முற்றிலுமாக இடிந்து தரை மட்டமானது.

இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 82 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே கட்டிட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும், படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி கூட்டுப்படைகளே இந்த வான்தாக்குதலை நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் சவுதி கூட்டுப்படைகள் இதனை மறுத்துள்ளது.

இதற்கிடையில் ஏமனில் சிறைச்சாலை மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதே போல் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் பதற்றத்தை தணிக்க வலியுறுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்