ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தாக்குதல்: அபுதாபியை நோக்கி 2 ஏவுகணைகள் வீச்சு

ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு படை அந்த ஏவுகணைகளை நடு வானிலேயே இடைமறித்து அழித்துவிட்தால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2022-01-24 22:52 GMT
கோப்புப்படம்
துபாய், 

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்த நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஈரானின் ஆதரவை பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இந்த போர் நடக்கிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் களத்தில் இருந்து வருகின்றன.

இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த கூட்டுப்படைகளுக்கு தலைமை தாங்கி வரும் சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசியும் டிரோன்களை (ஆளில்லா விமானம்) கொண்டும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த சூழலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீரென தங்களின் கவனத்தை சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் மீது திருப்பியுள்ளனர்.

அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கின் மீது அடுத்தடுத்த 2 டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

இது, ஐக்கிய அரபு அமீரகம் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் இணைந்த பிறகு அந்த நாட்டின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று மீண்டும் அபுதாபி நகரை நோக்கி 2 ஏவுகணைகளை வீசினர்.

எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு படை அந்த ஏவுகணைகளை நடு வானிலேயே இடைமறித்து அழித்துவிட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஏவுகணைகளின் சிதைவுகள் அபுதாபி நகரின் பல பகுதிகளில் விழுந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரக ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “திங்கட்கிழமை அன்று ஹவுதி பயங்கரவாத குழு நமது நாட்டை நோக்கி 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசியது. அவற்றை நமது வான் பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டனர்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் “எந்தவொரு அச்சுறுத்தல்களையும் சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளது. அனைத்து தாக்குதல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும். அதிகாரப்பூர்வ செய்தி ஆதாரங்களின் தகவல்களை தவிர மக்கள் வேறு எதையும் நம்ப வேண்டாம்” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்