ஐ.நா. ஊழியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களை சிறைபிடித்த தலீபான்கள்..!

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. ஊழியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களை தலீபான்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-02-13 00:57 GMT
கோப்புப்படம்
காபூல், 

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அப்போது முதல் அங்கு கடுமையான மனிதாபிமான நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அந்த நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் ஊழியர்கள் அங்கு முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த ஆணையத்துடன் இணைந்து பணியாற்றி வந்த 2 வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஆணையத்தின் ஊழியர்கள் பலரை தலைநகர் காபூலில் தலீபான்கள் நேற்று காலை சிறைபிடித்தனர். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் சிறைபிடித்த சில மணி நேரங்களுக்கு பின்னர் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மற்றும் ஐ.நா. ஊழியர்களை தலீபான்கள் விடுதலை செய்தனர்.

இது குறித்து தலீபான் அரசின் தகவல் மற்றும் கலாசார இணை மந்திரி ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில், “ஐ.நா. ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் அவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களின் அடையாளங்கள் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து விடுவிக்கப்பட்டனர்” என கூறினார்.

மேலும் செய்திகள்