அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! 2-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே வீசிய தந்தை!

அந்த குழந்தையை கீழே நின்று கொண்டிருந்தவர்கள் பத்திரமாக பிடித்து கொண்டனர்

Update: 2022-03-13 09:46 GMT
நியூ ஜெர்சி,

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் அந்த வீட்டின் மேல்தளத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்து கொண்டிருந்தனர். 

தகவலறிந்து உடனே தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் தீ மளமளவென பரவியது.

உடனே அவர்கள் மாடியிலிருந்து வீட்டின் உரிமையாளரிடம் அவர்களுடைய கைக்குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி கீழே வீசும்படி கூறினர். அவரும் சற்றும் தாமதிக்காமல் 2-வது மாடியிலிருந்து தனது 3 வயது குழந்தையை  கீழே நின்று கொண்டிருந்த மீட்பு படையினரை நோக்கி வீசினார். அந்த குழந்தையை கீழே நின்று கொண்டிருந்தவர்கள் பத்திரமாக பிடித்துக் கொண்டனர்.

பின்னர் அவரும் கீழே குதித்து உயிர் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அதில் அந்த குழந்தைக்கு பெரிதாக காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

மேலும் அந்த விபத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த 50 பேர் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த காட்சிகள் மீட்புப்படையினரின் தலை கவசத்தில் உள்ள கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால், வீடியோவில் தெளிவாக காட்சிகள் பதிவாகவில்லை. 

மேலும் செய்திகள்