பாகிஸ்தான்: பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ராஜினாமா - இம்ரான்கானுக்கு நெருக்கடி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவியில் இருந்து உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2022-03-28 14:27 GMT
Image Courtesy: Imran Khan's Instagram Account
லாகூர்,

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கடன் சுமை, பொருளாதார வீழ்ச்சியால் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு இம்ரான் கானின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டன.  இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என நம்பப்படுவதால் இம்ரான்கான் அரசு கவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தகைய பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தாக்கல் செய்தார். முன்னதாக, தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 161 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, தீர்மானத்தை தாக்கல் செய்து ஷெபாஸ் ஷெரீப் பேசினர்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும். இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா? அல்லது அவரது அரசு கவிழுமா? என்பது அந்த சமயத்தில் தெரிந்து விடும்.

இதற்கிடையில், பிரதமர் இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதை போன்றே பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஷ்டர் மீதும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பஞ்சாப் முதல்-மந்திரி உஸ்மான் பிரதமர் இம்ரான்கானின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்து வருகிறார். இதனால், பஞ்சாப் அரசையும் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி பதவியில் இருந்து உஸ்மான் புஷ்டர் ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் இம்ரான்கானை இன்று சந்தித்த உஸ்மான் புஷ்கர் அவருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் முதல்-அமைச்சர் பதவியை உஸ்மான் ராஜினாமா செய்தார். இம்ரான்கானின் நம்பிக்கைக்குரிய நபரான உஸ்மான் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரி இ-இன்ஷெப் கட்சி 155 இடங்களை கைப்பற்றியது. மேலும், 4 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 179 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான்கான் ஆட்சியமைத்தார். 

தற்போது, சொந்த கட்சி உறுப்பினர்களே இம்ரான்கானுக்கு எதிராக இறங்கியுள்ளதால் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு கவிழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்