இஸ்ரேல்: ஐ.எஸ். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 2 போலீசார் பலி

இஸ்ரேலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உயிரிழந்தனர்.

Update: 2022-03-28 15:14 GMT
Image Courtesy: AFP
ஜெருசலேம்,

இஸ்ரேலின் ஷரோன் மாகாணம் ஹடீரா நகரில் நேற்று இரவு உணவகம் அருகே சில போலீசார் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த இருவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பொதுமக்களில் சிலரும் படுகாயமடைந்தனர். 

இதனை தொடர்ந்து அந்த உணவகம் அருகே நின்றுகொண்டிருந்த போலீசார் தாக்குதல் நடத்திய இருவரையும் சுட்டுக்கொன்றனர்.

இந்நிலையில், இஸ்ரேல் போலீசார் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.  

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இருவரும் இஸ்ரேலில் வசித்து வரும் அரேபியர்களாவர். அய்மென் இங்பரயா மற்றும் இப்ராகிம் இங்பரயா ஆகிய இரு ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, எகிப்து, பக்ரைன் ஆகிய நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகள் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியும் இஸ்ரேல் வந்துள்ளார். 

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரிக்கும், அரபு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கும் இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகள்