இலங்கையில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - கண்ணீர்புகை குண்டு வீச்சு

இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கலைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-04-03 14:06 GMT
கண்டி,

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, 13 மணி நேர மின்வெட்டு மக்களை முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் தெருவில் இறங்கி போராடிவருகிறார்கள்.

இதற்கிடையில், இலங்கையில் நேற்று முன்தினம் முதல் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இன்று மாபெரும் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியாகவும், நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும், சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கியது. இதனால் போராட்டம் ஓரளவு தணிந்துள்ளது.

இந்த நிலையில், கண்டி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அருகில் இருந்து கண்டி நகரம் வரை ஆர்ப்பாட்ட பேரணி நடத்த முயன்றதால் மாணவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும் கண்ணீர்புகை குண்டுகளை வீசியும் கலைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர் போலீசாரின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கலைந்து சென்றுள்ளனர். அதேசமயம், மீண்டும் அங்கு போராட்ட சூழல் உருவாவதை தடுக்க, பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்