கனடா துப்பாக்கி சூடு; உயிரிழந்த இந்திய மாணவருக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்

கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு மத்திய வெளிவிவகார மந்திரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-04-09 08:53 GMT



டொரண்டோ,



கனடாவின் டொரண்டோ நகரில் புறவழி பாதையின் நுழைவு பகுதி ஒன்றில், கடந்த வியாழ கிழமை மாலையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்து கிடந்த நபர் இந்தியாவை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (வயது 21) என பின்னர் அடையாளம் காணப்பட்டது.  அவரை துணை மருத்துவர் ஒருவர் கண்டு, மருத்துவ முதலுதவி அளித்து உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  சந்தேகத்திற்குரிய நபர் கடைசியாக கையில் துப்பாக்கி ஒன்றை வைத்து கொண்டு கிளென் சாலையில், ஹோவர்டு தெருவை நோக்கி தெற்கு பகுதியில் நடந்து சென்றார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

எனினும், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார்.  இந்த சம்பவத்திற்கு டொரண்டோவில் உள்ள இந்திய தூதரகம் கடும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளது.  அவரது உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியப்பட்ட, அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.

இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று
இரங்கல் தெரிவித்து உள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டொரண்டோவில் இந்திய மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சோக சம்பவம் பற்றி அறிந்து வருத்தம் அடைந்தேன்.  அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்