வெனிசுலாவின் எண்ணெய் துறை மீது புதிய தடைகளை விதித்த அமெரிக்கா
வெனிசுலாவின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கும் டிரம்ப் புதிய தடைகளை விதித்து உள்ளார்.;
வாஷிங்டன் டி.சி.,
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ இருந்து வருகிறார். அவருக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், நிக்கோலஸ் ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.
அவர்கள் குற்றவாளிகளையும், சிறை கைதிகளையும், அவர்களுடைய போதை பொருள் கடத்தல் கும்பல்காரர்களையும் எங்களுடைய நாட்டுக்குள் அத்துமீறி நுழைய செய்கின்றனர் என டிரம்ப் குற்றச்சாட்டாக கூறி வருகிறார். வேறு எந்த நாட்டையும் விட வெனிசுலாவில் இருந்தே லட்சக்கணக்கானோர் எங்களுடைய திறந்த நிலையிலான எல்லைக்குள் நுழைகின்றனர்.
இதனை முன்னிட்டு அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தடைகளையும் விதித்து வருகிறார். இந்த நிலையில், மதுரோவின் சட்டவிரோத ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில், நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்க கூடிய சில எண்ணெய் கப்பல்களை நாங்கள் கண்டறிந்து உள்ளோம். தடை நடவடிக்கை எடுக்க கூடிய வகையிலான இந்த கப்பல்களையே மதுரோவின் ஆட்சி அதிகம் சார்ந்து இருக்கிறது.
அதன் வழியே வருவாயையும் ஈட்டி வருகிறது. அதனை கொண்டு அமெரிக்காவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறியுள்ள டிரம்ப், அந்நாட்டின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கும், அதனுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்களுக்கும் புதிய தடைகளை விதித்து உள்ளார்.
அமெரிக்க நாட்டில் போதை பொருட்களை குவிக்கும் வேலையில் ஈடுபட்டு விட்டு, எண்ணெய் ஏற்றுமதி வழியே லாபம் பெற முயற்சிக்கும் சட்டவிரோத மதுரோவின் ஆட்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க கருவூல துறை மந்திரி ஸ்காட் பெஸ்சன்ட் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. மதுரோவை ஆட்சியில் இருந்து அகற்றும் பணியில் அமெரிக்கா மேற்கொள்ளுமா? என சமீபத்தில் டிரம்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அது நடக்கலாம் என நான் நினைக்கிறேன் என கூறினார். எனினும், அது அவரை சார்ந்தது. அதனை நான் கூற முடியாது. அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருடைய விசயம். பதவி விலகினால் அவருக்கு நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் என்றும் கூறினார்.