அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி 2 பேர் சாவு 200 வீடுகள் எரிந்து நாசம்

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள ருயிடோசோவில் கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

Update: 2022-04-15 22:10 GMT
கோப்புப் படம்
நியூயார்க், 

அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள மலை கிராமமான ருயிடோசோவில் கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

ஆனால் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்டுத்தீ ருயிடோசோவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை களேபரம் செய்து வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி 200-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. அதில் ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, சுமார் 5 ஆயிரம் பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே இந்த காட்டுத்தீ காரணமாக ருயிடோசோவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் காட்டுத்தீ காரணமாக ருயிடோசோவில் உள்ள பள்ளிக்கூடங்கள் அடுத்த வாரம் வரை மூடப்பட்டிருக்கும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்