ஷாங்காய் மாநகரில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க சீன அரசு முடிவு!

ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவிவரும் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சீன அரசு எடுத்துள்ளது.

Update: 2022-04-18 11:16 GMT
பீஜிங்,

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகின்றன.

சீனாவின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய, வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வரங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஷாங்காயில் சில பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க சீன அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு வெளிநாட்டு தூதர்கள், வணிக குழுக்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சீன அதிகாரிகள் அழுத்தத்தை எதிர்கொண்டனர். அதன் விளைவாக, முக்கிய உற்பத்தித் தளங்களில் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் என்று ஷாங்காய் பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையம் தெரிவித்துள்ளது. 

பெரு நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும்  கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்த பின், உரிய அனுமதி பெற்று  பாதுகாப்பான முறையில் பணிகளை தொடங்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒருபுறம் ஒமிக்ரான் வைரஸ் தீவிரமாக பரவிவரும் சூழலில்,  ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவை சீன அரசு எடுத்துள்ளது.

ஷாங்காய் நகரில் வசிக்கும் 2.5 கோடி குடியிருப்பாளர்கள் மீது, தற்போது வரை குறைந்தபட்சம் ஒன்பது சுற்று கொரோனா பரிசோதனைகள் நகரம் முழுவதும்  நடத்தப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்