போரை நிறுத்தவே விருப்பம்; ஆனால் சரண் அடைய மாட்டோம்: ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரை
வலுவிழந்த ஒப்பந்தம் போர்கள் நீளவே வழிசெய்யும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.;
கீவ்,
நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். எனினும், போர்நிறுத்தத்திற்கான உடன்படிக்கை எட்டப்படாத சூழல் உள்ளது. இதனால், போர் நீடித்து வருகிறது.
இந்த சூழலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 21 நிமிடம் உரையாற்றினார். ஏறக்குறைய 4-ம் ஆண்டை நோக்கி போர் சென்று கொண்டிருக்கும் நிலையில், உக்ரைனியர்களிடையே சோர்வு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டார். ஆனால், அதனை வீழ்ச்சி என தவறாக கருதி விட கூடாது என்றும் கூறினார்.
இவ்வளவு ஆண்டுகளாக நடந்து வரும் போரை, அவர் 2-ம் உலக போரின்போது, உக்ரைனின் சில பகுதிகளை நாசி படையினர் கைப்பற்றியிருந்த கால கட்டத்துடன் ஒப்பிட்டார். அவர் ஆற்றிய உரையின்போது, உக்ரைனுக்கு அமைதி வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரவே நாங்கள் விரும்புகிறோம். உக்ரைனின் முடிவுக்கு அல்ல.
நாங்கள் களைத்து போய் விட்டோமா? என கேட்டால்.. ஆம். அது உண்மைதான். அதற்காக நாங்கள் சரணடைய தயார் என்பது அதன் பொருளா? அப்படி யாரேனும் நினைக்கிறார்கள் என்றால் அது பெரிய தவறு என கூறினார்.
போரை நிறுத்தவே விரும்புகிறோம். ஆனால் நாங்கள் சரண் அடைய மாட்டோம். வலுவான ஒப்பந்தத்திலேயே நான் கையெழுத்திடுவேன். வலுவிழந்த ஒப்பந்தம் போர்கள் நீளவே வழிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
அதனாலேயே ஒவ்வொரு கூட்டத்திலும், ஒவ்வொரு தொலைபேசி அழைப்பிலும், ஒவ்வொரு முடிவும் அதற்கேற்ப எடுக்கப்படுகிறது.
அனைவருக்கும் ஆற்றல் வாய்ந்ததோர் அமைதியை கிடைக்க செய்ய, அது ஒரு நாளுக்கோ, ஒரு வாரத்திற்கோ அல்லது 2 மாதங்களுக்கோ என்றில்லாமல், பல ஆண்டுகளுக்கான அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றார்.