எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம்... சீனாவின் நோக்கம் என்ன?

பருவகால மாற்றம், பசுமை இல்ல வாயு ஆகியவற்றை ஆய்வு செய்யும் நோக்குடன் எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம் ஒன்றை சீனா அமைத்து உள்ளது.

Update: 2022-05-05 06:11 GMT

பீஜிங்,



இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் தென்பகுதியில் 8,430 மீட்டர் உயரத்தில் வானிலை மையம் ஒன்றை அமைத்தனர்.  இது உலக சாதனையாக இருந்தது.

இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 8,830 மீட்டர் உயரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம் ஒன்றை சீனா அமைத்து உள்ளது.  இந்த நிலையத்தில் இருந்து, தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டு சோதனை செய்து அதிலும் சீனா வெற்றி பெற்றுள்ளது.

2 ஆண்டுகள் வரை செயல்பட கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த தானியங்கி வானிலை நிலையம், சூரிய தகடுகளின் வழியே தேவையான ஆற்றலை பெற்று கொள்கின்றன.

கடுமையான பருவகால சூழலிலும் செயல்படும் திறன் பெற்ற இந்த நிலையம், தகவல் பரிமாற்றத்திற்காக செயற்கைக்கோள் தொலைதொடர்பு சாதனம் ஒன்றையும் கொண்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு 12 நிமிடத்திற்கு ஒரு முறை தகவல் பரிமாற்றம் நடைபெறும் வகையிலான செயல்பாட்டிற்கு ஏற்ற குறியீடுகள் இதில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

சீனா, இதற்கு முன்பு எவரெஸ்ட் மலையின் வடபகுதியில் 7,028 மீட்டர், 7,790 மீட்டர் மற்றும் 8,300 மீட்டர் உயரத்தில் 3 வானிலை ஆய்வு மையங்களை அமைத்து உள்ளது.  இதுபோன்று 5,200 மீட்டர் முதல் 8,300 மீட்டர் வரை உயரம் கொண்ட மொத்தம் 7 நிலையங்களை சீனா எவரெஸ்டில் கொண்டுள்ளது.

இந்த நிலையம் உருவாவதற்காக தேவையான 50 கிலோ எடை கொண்ட சாதனம், உயரே கொண்டு செல்ல வசதியாக பிரித்து எடுக்கப்பட்டு பின்னர் சிகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தலைமையில் மலையேற்ற குழு ஒன்று எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்று அதனை அமைத்துள்ளது.  இதற்காக 270க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் மொத்தம் 16 குழுக்கள் கடந்த ஏப்ரல் 28ந்தேதி மலையேற்ற பயணத்தில் ஈடுபட தொடங்கியது.  எனினும், இறுதியில் 13 பேரே மலையின் உச்சியை சென்றடைந்தனர்.

இந்நிலையம், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தகவல்களை சேகரித்து அவற்றை அனுப்பி வைக்கும்.  இந்த குழுவானது மலைக்கு செல்லும்போது 5,800 மற்றும் 8,300 மீட்டர் உயரத்தில் இருந்து பனி மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து வந்துள்ளது.

எவரெஸ்டின் உயரம் வாய்ந்த பகுதியில் பருவகால மாற்றம் மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் வேறுபட்ட தன்மை ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது என சீன அறிவியல் அகாடமிக்கான, திபெத்திய பீடபூமி ஆய்வு மையத்தின் இயக்குனரான வூ ஜியாங்குவாங் தெரிவித்து உள்ளார்.

பருவகால மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின் கீழ் வளர்ச்சியடைந்த மற்றும் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் தங்களது செயல் இலக்குகளை அடையும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.  அதற்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யவும் வளர்ந்த நாடுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

இதனால், சீன நாட்டின் இந்த முயற்சி அதற்கு தீர்வு காண்பதில் ஒரு முன்னோடியாக இருக்கும் என பார்க்கப்பட்டாலும், வேறு ஏதேனும் உளவு வேலையிலும் ஈடுபட கூடிய சாத்தியம் உள்ளது என்பதும் மறுப்பதற்கு இல்லை.



மேலும் செய்திகள்