இத்தாலி: தொண்டு நிறுவனம் மூலம் நிதி திரட்டல் - ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ரூ. 74 கோடி அனுப்பிய கும்பல்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகள் போர் நடைபெற்றது;
ரோம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே போர் மூண்டது. கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வந்தது. இந்த போரில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, இந்தபோரின் போது காசா முனையில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவ பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டின.
இந்நிலையில், இத்தாலியில் தொண்டு நிறுவனங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளுக்காக நிதி திரட்டுவதாக கூறி இத்தாலியின் ஜினோயா, மில்லன் போன்ற நகரங்களில் தொண்டு நிறுவனம் கிளைகளை தொடங்கியுள்ளது. இந்த தொண்டு நிறுவனத்தில் மக்கள் கோடிக்கணக்கான பணம் நிதியாக கொடுத்துள்ளனர்.
அந்த நிதியை தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு கொடுத்துள்ளனர். இந்திய மதிப்பில் 74 கோடி ரூபாய் நிதி திரட்டி அதை பல்வேறு சிக்கலான வங்கிக்கணக்குகள் மூலம் ஹமாஸ் ஆயுதக்குழுவின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் , இத்தாலியில் பாலஸ்தீன இயக்கத்தின் தலைவர் முகமது ஹனோன் உள்பட 9 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். மேலும் , ஹமாசுக்கு நிதி உதவி அளித்த தொண்டு நிறுவனத்தின் சொத்துக்களையும் முடக்கியுள்ளனர்.