நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்... இன்னும் பயிற்சியில் தேர்ச்சியடையவில்லை - நடுவானில் பீதியை கிளப்பிய விமானி...!

பயிற்சி முழுமையடையாத துணை விமானி 300-க்கும் மேற்பட்டோர் பயணித்த விமானத்தை இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-05 12:57 GMT
Image Courtesy: VirginAtlantic
லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஹித்ரோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நோக்கி  கடந்த 2-ம் தேதி வெர்ஜின் அட்லாண்டிகா விமான நிறுவனத்தின் ஏ330 ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் சுமார் 300 பேர் பயணித்தனர்.

விமானத்தை விமானி மற்றும் துணை விமானி இயக்கினர். விமானம் புறப்பட்டு 40 நிமிடத்தில் அயர்லாந்து வான்பறப்பில் பறந்துகொண்டிருந்தது.

விமானத்தை 17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட விமானி இயக்கினார். அதேவேளை துணை விமானி 2017-ம் ஆண்டு தான் பணியில் சேர்ந்துள்ளார். அவர் விமானத்தை இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருந்தபோதும் வெர்ஜின் அட்லாண்டிகா விமான நிறுவனத்தின் விமானத்தை இயக்குவதற்கான செய்முறையில் பயிற்சி நிலையிலேயே உள்ளார். பயிற்சியின் இறுதி மதிப்பீட்டில் அந்த விமானி இன்னும் பங்கேற்கவில்லை.

அந்த இறுதி மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே வெர்ஜின் அட்லாண்டிகா விமானத்தை இயக்க முழு தகுதி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால், அந்த இறுதி மதிப்பீட்டில் பங்கேற்காமலேயே அவர் துணை விமானியாக விமானத்தை இயக்கியுள்ளார்.

தனது துணை விமானி இறுதி மதிப்பீட்டு தேர்ச்சியை இன்னும் பெறவில்லை என்பது விமானிக்கு தெரியவந்துள்ளது. விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது துணை விமானியின் பொறுப்பு. இதனை தொடர்ந்து துணை விமானி நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் அறிவிப்பு ஒன்றை வாசித்தார். 

அதில், நான் உங்கள் துணை விமானி பேசுகிறேன்... நான் இன்னும் விமான பயிற்சியின் இறுதி மதிப்பீட்டில் பங்கேற்கவில்லை. அதில், தேர்ச்சியடையவில்லை’ என்றார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனை தொடர்ந்து விமானம் மீண்டும் லண்டன் ஹித்ரோ நகருக்கே திரும்பியது. பின்னர் சில மணி நேர தாமதத்திற்கு பின் தேர்ச்சி பெற்ற அனுபவமுள்ள விமானி, துணை விமானி மூலம் விமானம் மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு சென்றது. 

மேலும் செய்திகள்