கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடு அமல்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன தலைநகர் பீஜிங்கில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-05-05 20:08 GMT
பீஜிங், 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன தலைநகர் பீஜிங்கில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகுக்கு பரப்பிய சீன நாடு, இப்போது அதில் இருந்து மீள முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது.

அந்த நாட்டின் பொருளாதார தலைநகரான ஷாங்காய் கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் முடங்கி உள்ளது. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கிக்கிடக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஷாங்காய் நகரின் நிலை இதுதான். மக்கள் போதுமான உணவைப் பெறவே போராடுகிற கடினமான தருணம் வந்துள்ளது. ஆனாலும் அங்கு நேற்று முன்தினம் உள்ளூர் அளவில் 4,390 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதே போன்றதொரு நிலைமை தலைநகர் பீஜிங்கிற்கும் வந்துவிடக்கூடாது என்று சீன அரசு முன்கூட்டியே உஷாராகி உள்ளது. அங்கு கடந்த மாதம் 22-ந் தேதியில் இருந்து இதுவரை 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பீஜிங் நகரில் தொற்று பரவல் தடுக்க புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கவும், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரவும் கொரோனா பாதிப்பு இல்லை என காட்டுகிற, 7 நாட்களுக்குள் பெற்ற நியூக்ளிக் பரிசோதனை அறிக்கையை பொதுமக்கள் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.

இந்த நகரில் பல சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டலுக்குள் சாப்பிடவும் மக்களுக்கு அனுமதி இல்லை.

மே தின விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்