ஆஸ்திரியாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி

ஆஸ்திரியாவில் பயணிகள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.

Update: 2022-05-10 23:58 GMT
வியன்னா, 

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் இருந்து பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது. ரெயிலில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் வியன்னா அருகே உள்ள முயன்சென்டார்ப் நகரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்தன. அதை தொடர்ந்து 2 ரெயில் பெட்டிகள் தண்டவாளத்துக்கு அருகில் உள்ள வயல் வெளியில் உருண்டு விழுந்தன. அதில் அந்த ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி நசுங்கினர். 

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 2 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்