வடகொரியாவிற்கு ஆதரவு: உலக சுகாதார அமைப்பு

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள வடகொரியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-05-16 14:09 GMT
பியாங்யாங்,

வடகொரியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று உருவாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, 

வடகொரியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. வடகொரியா இன்னும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியை தொடங்காமல் உள்ளது. இதனால், தொற்று மக்களிடையே வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது

வடகொரியாவிற்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டு வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவதற்கும், அரசுக்கும், மக்களுக்கும் உலக சுகாதார அமைப்பு எப்பொழுதும் ஆதரவளிக்கவும், அக்கறை காட்டவும் தயாராக உள்ளது. 

பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும், அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதன் மூலம், எங்கள் உறுப்பு நாட்டிற்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு பிராந்திய இயக்குனர் கூறினார். 

மேலும் செய்திகள்