பலுசிஸ்தானில் பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது தாக்குதல் முயற்சி - 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Update: 2024-03-26 08:42 GMT

Image Courtesy : AFP

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பலுசிஸ்தானில் உள்ள இயற்கை வளங்களை பாகிஸ்தான் மற்றும் சீன அரசுகள் சுரண்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் பல்வேறு தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் மாக் டவுன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24-ந்தேதி குவாடார் துறைமுக வளாகத்தில் நடந்த தாக்குதலின்போது 8 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல்கள் அனைத்திற்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தான்-ஈரான் எல்லை அருகே முகாமிட்டு இயங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கராச்சி மாகாணத்தில் உள்ள துர்பாட் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் கடற்படை விமான தளம் மீது நேற்று இரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். விமான தளத்தின் மூன்று புறங்களில் இருந்தும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த மோதலின்போது 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதோடு பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாகவும், கடற்படை விமான தளத்தில் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்