காசாவில் 3,500 பயங்கரவாத இலக்குகள் மீது குண்டுவீச்சு தாக்குதல் - இஸ்ரேல் தகவல்

காசாவில் 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகளை குண்டுவீசி தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

Update: 2023-10-12 17:12 GMT

Image Courtacy: ANI

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.

இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இரு தரப்புக்கு இடையேயான போர் இன்று 6-வது நாளை எட்டியுள்ளது. போரினால் காசா முனையில் இருந்து மட்டும் சுமார் 3,38,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப்படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காசாவில் பலி எண்ணிக்கை 1,354 ஆக உயர்ந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 1,200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் காசாவில் 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாத இலக்குகளை குண்டுவீசி தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதன்படி இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் காசா பகுதியில் 3,600 இலக்குகளைத் தாக்கி, குறைந்தது 6,000 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்