ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

ராம தூதரான ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார்.

Update: 2016-12-26 20:45 GMT
ராம தூதரான ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். அனுமன் ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். பல சாகசச் செயல்களைச் செய்து காட்டியவர். சீதையைத் தேடி கண்டுபிடிக்க கடலைத் தாண்டியவர். வாலியிடம் இருந்து சுக்ரீவனைக் காத்தவர். ராவணனின் மகன்களைக் கொன்றவர். இலங்காபுரியை தீக்கிரையாக்கியவர்.

ராமர் கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர்      களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர். வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.

பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார். நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’


நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும்.

மேலும் செய்திகள்