சபரிமலையில் இன்று மண்டல பூஜை.. அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை

தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது.;

Update:2025-12-27 03:54 IST

சபரிமலை,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்து வருகிறது.

மண்டல சீசனின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. பொதுவாக மண்டல பூஜையையொட்டி, திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி, பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மண்டல பூஜைக்காக கடந்த 23-ந்தேதி இந்த கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.

இந்த தங்க அங்கி நேற்று மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேர்ந்தது. அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தனர். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேர்ந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தங்க அங்கியை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து 18-ம் படி வழியாக எடுத்து செல்லப்பட்டு மாலை 6.15 மணிக்கு அய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அலங்கார தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜையை தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு காலை 10.10 மணி முதல் 11.30 மணி வரை மண்டல சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்