முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்..

நட்பின் பெருமை, எதையும் எதிர்பார்க்காத மனநிலையைக் கொண்டிருப்பவர்களுக்கே சாத்தியமாகிறது.

Update: 2017-08-08 09:59 GMT
ட்பு... காதலைப்போலவே இந்த வார்த்தையும் உயிர்களிடம் மதிப்பையும், மரியாதையையும், நெருக்கத்தையும் அளிக்கக்கூடியது. காதலைவிடவும் ஒருபடி மேலானதும் கூட. ஆனால் நட்பின் பெருமை, எதையும் எதிர்பார்க்காத மனநிலையைக் கொண்டிருப்பவர்களுக்கே சாத்தியமாகிறது. புராணத்தில் நாம் படிக்கும் கிருஷ்ணரையும், சுதாமாவையும் போல.

வேதங்களை முழுமையாக கற்றறிந்திருந்தவர் சுதாமா. அவரது வாழ்க்கை ஜீவிதம் உஞ்சவிருத்தி மூலம் நடந்து வந்தது. அவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 5 பிள்ளைகள். கிடைப்பதை உண்டு வாழும் வாழ்வில் செல்வ வளத்தை எப்படி அனுபவிக்க முடியும். சுதாமாவின் இல்லறமும் கூட வறுமையிலேயே கழிந்தது. அவரது வீட்டில் நிரம்பியிருந்த செல்வம், பக்தி. ஆம்.. அவர் கிருஷ்ணரின் மீது அளவு கடந்த பக்தியை செலுத்தி வந்தார். அவரைப் போலவே அவரது மனைவி சுசீலையும். கிருஷ்ணர் இறைவனின் அம்சம் என்பதையும் தாண்டி, சுதாமாவின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். இருவரும் குருகுல கல்வி பயின்ற காலத்தில் தோழர்களாக பழகியவர்கள். ஒருவர் மீது ஒருவருக்கு அளவு கடந்த பாசம். பள்ளிப் பருவம் முடிந்ததும் இருவரும் தனித்தனியாக சென்று விட்டனர்.

ஒரு நாள் சுசீலை தன் கணவரிடம், ‘நீங்கள் துவாரகை சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை சந்தித்து வாருங்கள். அவர் நம் வாழ்வு வளம் பெற உதவுவார்’ என்றாள்.

சுசீலை அப்படிக் கேட்டது, அவளுக்காக அல்ல.. ஏழ்மையின் காரணமாக பசியோடு படுத்து உறங்கும் பிள்ளைகளை நினைத்து.. கொஞ்சம் பணம் இருந்தால், பிள்ளைகளுக்கு மூன்று வேளை உணவளிக்கலாமே என்ற அவரது எண்ணம், தாய்மைக்கே உரிய போராட்டம்.

மனைவியின் எண்ணத்தைப் புரிந்து கொண்டாலும், ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் கிருஷ்ணரிடம் போய் நிற்பதாக என்று நினைத்தார் சுதாமா. இருப்பினும் கிருஷ்ணரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்தது. சுசீலை, அக்கம் பக்கத்து வீட்டாரிடம் கொஞ்சம் அவல் கடன் வாங்கி சுதாமாவிடம் கொடுத்தார். அதனை தன்னுடைய கந்தலான வேட்டியில் வைத்து பொதிந்தபடி துவாரகை நோக்கிச் சென்றார்.

துவாரகை சென்றதும், மன்னனான கிருஷ்ணரை பார்ப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்று சுதாமா நினைத்திருப்பார். ஆனால் அங்கு எல்லாம் நேர்மாறாக இருந்தது. ஏனெனில் வேதம் ஓதுபவர்கள் அரண்மனைக்கு வந்தால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கிருஷ்ணர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவால் இப்போது சுதாமா வந்திருக்கும் செய்தி கிருஷ்ணரை எட்டியது.

சுதாமா என்ற பெயரைக் கேட்டதும் துள்ளிக் குதித்து சிறுபிள்ளைப் போல் அரண்மனை வாசலுக்கு ஓடி வந்தார் கண்ணன். ‘நண்பனே! சுதாமா! உன்னைப் பார்த்து எத்தனை ஆண்டுகளாகி விட்டது. மீண்டும் உன்னைக் காண்பதற்கு என்ன பாக்கியம் செய்தேனோ!’ என்று கூறி அவரை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அப்போதே சுதாமாவின் வறுமை விலகிப் போனது. ஏனெனில் கிருஷ்ணரின் மார்பில் மகாலட்சுமி அல்லவா உறைந்திருக்கிறாள். நண்பனை மார்போடு அணைத்தபோது, அவளது நேரடிப்பார்வை சுதாமாவின் மீது பட்டதால் வறுமை அகன்றது.

அவலைப் பறித்தார்

சுதாமாவை தன் அறைக்குள் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர். அவர் பிராமணர் என்பதால் அவருக்கு பாத பூஜை செய்து தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார். ருக்மணியும் அவ்வாறே செய்தாள். பின்னர் ‘அவந்தியில் இருந்து நடந்தே வந்தீரா?. பாதங்கள் எவ்வளவு வலி பெற்றிருக்கும்?’ என்று கேட்டவாறே சுதாமாவின் கால்களை பிடித்து நீவி விட்டார் கிருஷ்ண பகவான். பிறகு பள்ளிப் பருவத்து சேட்டைகள் பற்றி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

‘பள்ளிக் காலத்தைப் பற்றி பேசியதில் உன் குடும்பத்தைப் பற்றி கேட்க மறந்து விட்டேன். அண்ணியார் நலமாக இருக்கிறார்களா?. அவர் என்மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். எனக்கு ஏதாவது பலகாரம் கொடுத்து அனுப்பி இருப்பாரே! கொண்டு வந்தாயா?’ என்று கேட்டார் கிருஷ்ணர்.

இவ்வளவு பெரிய அரண்மனையில் இருக்கும் நண்பனாகிய, இறைவனுக்கு இந்த அவலையா கொடுப்பது என்ற காரணத்தால் தான் கொண்டு வந்திருந்த அவலை மறைக்க முயன்றார் சுதாமா. விட்டு விடுவாரா கண்ணன்? அவர் மடியில் வைத்திருந்த அவலை பறித்து, ஒருபிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டார். மறு கணமே, அவந்தியில் உள்ள சுதாமாவின் குடிசை மட்டுமின்றி, அங்கிருந்த அனைத்து வீடுகளும் செல்வச் செழிப்பு மிக்க கட்டிடங்களாக உயர்ந்து நின்றன. ஒவ்வொருவருடைய வீட்டிலும் தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் என பல ஆபரணங்கள் இறைந்து கிடக்கும் அளவுக்கு செழிப்புற்றதாகி விட்டது.

செல்வம் மிகுந்த வீடுகள்

இவையெல்லாம் அறியாதவராக இருந்தார் சுதாமா. மீண்டும் ஒரு பிடி அவலை கிருஷ்ணர் சாப்பிட முயன்ற போது, அதனை ருக்மணி வாங்கி உண்டு விட்டார். அதிக செல்வத்தின் காரணமாக சுதாமாவிற்கு அகந்தை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்தார். இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டு அவந்திக்கு புறப்பட்டார் சுதாமா. அவந்திக்கு சென்றபோது அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து போய்விட்டார்.

அனைத்து வீடுகளும் மாடங்களாக உயர்ந்திருந்தன. நகரின் எல்லையில் கால் வைத்தபோது, சுதாமாவின் கிழிந்த வஸ்திரம், பட்டு வஸ்திரமாக மாறியது. அவர் கழுத்தில் பொன் நகைகள் மின்னின. அதைக் கண்டு ஆனந்தப்படாதவராக, கண்ணனின் நாமத்தை கூறியபடி, தன் வீட்டைத் தேடி அலைந்தார். அப்போது ஒரு மாடத்தில் நின்று கொண்டு சுசீலை அழைத்தாள். ‘இது தான் நம் வீடு! இங்கு வாருங்கள்’ என்றாள்.

அதிர்ச்சி மாறாது அங்கு சென்றார். மனைவியின் கழுத்தில் அதிக கணத்துடன் பல நகைகள் தொங்கின. தங்கம், மாணிக்கத்தால் செய்த தேரை குழந்தைகள் இழுத்து விளையாடிக் கொண்டிருந்தன. வேலைக்காரியின் கழுத்தில் கூட பவுன் கணக்கில் நகை கிடந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. சுதாமாவின் முகம் மட்டும் கோபத்தில் சிவந்தது. அவரது உள்ளம் எரிமலையாக கொதித்தது.

‘கிருஷ்ணா! என் அருமை நண்பனே! மாயவனே! என்னை ஏமாற்றி விட்டாயடா! நான் உன் மீது வைத்திருக்கும் பக்திக்கு அவ்வளவுதான் மரியாதையா?. இந்த அழியும் செல்வத்தைக் கேட்டா, உன்னை தேடி, ஓடிவந்தேன். நான் உன்னிடம் தினமும் கேட்பதெல்லாம், வைகுண்டத்தில் ஓர் இடம்... உன் பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம்... இந்த நிரந்தர செல்வத்தை நாடியல்லவா உன்னிடம் வந்தேன். நீ என்னை ஏமாற்றி விட்டாயடா!’ என்று கூறி கதறத் தொடங்கினார் சுதாமா.

பக்தனும், நண்பனுமான சுதாமாவின் கதறலைக் கேட்டு, அவரது முன்பு வந்து நின்றார் கிருஷ்ண பகவான். அவரை அப்படியே தன்னுள் இழுத்துக் கொண்டார். வைகுண்டம் அழைத்துச் சென்றார்.

இறைவன் அருளும் வறுமையைக் கூட வரப்பிரசாதமாக எண்ணி வாழும் பக்தர் களால், இறைவனின் அடியைச் சேர முடியும். அதற்கு சுதாமாவின் வாழ்க்கையே சாட்சி. 

குழந்தை பிராய கடன்

பால்ய வயதில் சாந்தீபனி முனிவரிடம் கிருஷ்ணரும், சுதாமாவும் பாடம் கற்றுவந்த போது, ஒருநாள் முனிவரின் மனைவி, இருவரையும் அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, ‘இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறி, வெல்லம் கலந்த அவலை சுதாமாவிடம் கொடுத்தனுப்பினாள். விறகு பொறுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பசி எடுக்கவே, சுதாமா பொட்டலத்தைப் பிரித்து அவலை சாப்பிட்டார். ஆனால் கிருஷ்ணரை அழைத்து அவருக்குரிய பங்கை கொடுக்கவில்லை. ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டார். அப்போது கிருஷ்ணர் ஏதும் சொல்லவில்லை.

பல ஆண்டுகள் கழித்து தன்னைப் பார்க்க வந்த சுதாமாவிடம் இருந்த அவலைப் பறித்து சாப்பிட்டார் கிருஷ்ண பகவான். அதன் மூலம் அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன் பொருளை வலுக்கட்டாயமாகவோ அல்லது அவருக்கு தெரியாமலோ பறித்தால், அவன் இறந்தாலும் சரி... அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.

பிறர் பொருளுக்கு யார் ஒருவன் ஆசைப்படுகிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான். சுதாமாவின் வாழ்விலும் அதுவே நிகழ்ந்தது. 

மூதாட்டியின் மகிழ்ச்சி

வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக வந்தாள். அவள் ஒரு பழ வியாபாரி. ‘பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா?’ என்று தன் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

அந்த சத்தம் கேட்ட கிருஷ்ணர், தன் பிஞ்சுக் கையில் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு, அதற்கு மாற்றாக மாம்பழம் வாங்குவதற்காக அந்த மூதாட்டியை நோக்கி ஓடினார். யசோதா, தெருவுக்கு வியாபாரிகளிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருந்தார். அதனால்தான் தானும் தானியத்தை எடுத்துக் கொண்டு பழம் வாங்கச் சென்றார்.

தான் கொண்டு வந்த சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், அந்த குழந்தையின் கொஞ்சும் அழகில், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ணபரமாத்மா.

பழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாராக தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

உண்மையான அன்புக்கும், பாசத்திற்கும் இறைவன் கொடுத்த பரிசு அது. 

மேலும் செய்திகள்