ஆன்மிகம்
கனவுகளால் கிடைக்கும் பலன்கள்

ஒரு சிலர் படுத்த உடனேயே தூங்கிவிடுவர். ஒரு சிலருக்கு பல மணி நேரம் புரண்டு, புரண்டு படுத்த பிறகே தூக்கம் வரும். ஒருசிலர் படுத்த உடன் பலவித சிந்தனைகளை மேற்கொண்டு தூங்காமல் கொட்டக் கொட்ட விழித்திருப்பர்.
உடல் தூங்கும் நேரத்திலும், மூளை செயல்படுவதால் தான் கனவுகள் தோன்றுகின்றன. தூங்கியவுடன் முதல் ஜாமத்தில் கனவு கண்டால் அது ஓராண்டில் பலிக்கும். இரண்டாவது ஜாமத்தில் கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலிக்கும். மூன்றாவது ஜாமத்தில் கனவு கண்டால் ஒரு மாதத்தில் பலிக்கும். அருணோதயத்தில் கனவு கண்டால் பத்து நாட்களில் பலிக்கும்.

விடியற்காலையில் கனவு கண்டால் கண்ட கனவு உடனடியாக பலித்து விடும்.
சமுத்திரத்தையும், தண்ணீர் பெருக்கையும், உப்பையும் கனவில் கண்டால் தனலாபம் எதிர்பாராத விதத்தில் உங்கள் இல்லம் தேடி வரப்போகின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தொழிலில் தனலாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கலாம். இப்படி ஏதாவது ஒரு வழியில் பணவரவு ஏற்படும்.

ஏதேனும் பத்திரங்களில் அல்லது நோட்டுகளில் கையெழுத்து போடுவது போல, நீங்கள் கனவு கண்டால் உத்தியோகத்தில் சிக்கல்கள் வரப்போகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அழகான குழந்தையை முத்தமிட்டு கட்டி அணைப்பது போல் கனவு கண்டால், யாரேனும் ஒருவர் தரும் பணத்தை முதலீடாய் வைத்து தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு.
உங்கள் வீட்டுக் கதவை யாரேனும் தட்டுவது போல கனவு கண்டால், பிறருக்காக நீங்கள் பாடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தை நீங்கள் பெற வழிபிறக்கும்.

நீங்களே ஒரு மரத்தில் ஏறி அங்குள்ள காய், கனிகளை பறிப்பது போல் கனவு கண்டால், நல்ல வசதி வாய்ப்புகள் விரைவில் வரப்போகின்றது என்பதை அறிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட கனவுகள் வரும்பொழுது வரும் வாய்ப்புகளை உபயோகப் படுத்திக் கொள்வது நல்லது. குறிப்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். கூட்டாளிகள் வந்து சேரலாம். இன்னும் இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறலாம்.

காய்கறிக் குவியல்களைக் கனவில் கண்டால், அல்லல்கள் ஏற்படும். இது போன்ற கனவுகள் தோன்றும் பொழுது உங்கள் பணியில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

யானை கனவில் வந்து ஆசீர்வாதம் செய்தால், மிகமிக நற்பலன் வந்துசேரும். விநாயகப் பெருமானின் அருள் முழுமையாக கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும். பிரபலமான மனிதர் ஒருவர் உங்களுக்கு பின்னணியாக இருந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பும் உண்டு.

பூனை, கரடி போன்றவை கனவில் வந்தால் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். முயல் வருவது போல கனவு கண்டால் செய்யும் புதிய முயற்சி விரைவில் கைகூடும்.

பறவைகளை கனவில் கண்டால் செலவு அதிகரிக்கும். மயில், அன்னம் போன்றவை கனவில் வருவது நல்லது. முருகப்பெருமான் அருளும், சரஸ்வதியின் அருளும் கிடைக்கும்.

கனவு கண்டால் அது எந்த ஜாமம் என்பதை அறிந்து பலன் அறிந்து கொள்வது நல்லது. நாம் காணும் கனவுகள் முன்கூட்டியே நமக்கு சில கருத்துக்களை உணர்த்துகின்றன என்பதை அனுபவத்தில் நாம் உணரலாம்.